நாடாளுமன்றத்தின் செயற்பாடு சட்டவிரோதமானது : வவுனியாவில் டக்ளஸ்

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவமானது சட்டவிரோதமானதாகும் என, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுலா விடுதியில் இன்று (24.11.2018) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயம் சட்டவிரோதமானதாகும். நான் ஆளும் கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது கட்சி சார்ந்த விடயம். அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதை எனது உரையில் தெரிவித்திருந்தேன்.

நேற்று நடைபெற்றது அரசாங்கத் தரப்பினருக்கு பெரும்பான்மை இருக்கின்றதா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பு அல்ல. அது நாடாளுமன்றத்தில் உள்ள தெரிவுக்குழுவை தெரிவு செய்வதற்கான ஒரு கூட்டம். அது சட்டவிரோதமாக நடந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்கால தடையே விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வரவுள்ளது. ஆகவே நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னரே நாங்கள் எதையும் சொல்லலாம். நீதிமன்றம் ஜனாதிபதி எடுத்த முடிவு தவறானது, தொடர்ந்து நாடாளுமன்றம் தொடர வேண்டும் என்றால், அப்போது தற்போதைய ஆளும் கட்சியினர் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள் அல்லது தேர்தல் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளுடன் வந்திருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் பல்வேறு பட்ட குறைகளை கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

You might also like