அச்சுவேலி முக்கொலை தொடர்பில் நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு

அச்சுவேலி முக்கொலை வழக்கின் தொடர் விசாரணையை அடுத்தவாரம் ஆரம்பிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்றையதினம் யாழ். நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வசித்து வந்த தனஞ்சயன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி தனது மாமியாரான நற்குணானந்தன் அருள்நாயகி, மைத்துனியான யசோதரன் மதுசா, மச்சானான நற்குணானந்தன் சுபாஸ்கரன் ஆகியோரை கொலை செய்ததாகவும் மனைவியான தனஞ்சயன் தர்மிகா மற்றும் தங்கவேல் யசோதரன் ஆகியோரை கொலை செய்ய முயன்றார் என்ற 5 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் 3 கொலைகள் மற்றும் 2 கொலை முயற்சிகளை மேற்கொண்டதாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ் மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கை விரைவில் நடாத்துமாறு அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இவ்வழக்கு நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டத்தரணி நிஷாந் நாகரட்ணம் ஆஜராகியிருந்ததுடன், எதிரி தரப்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன் மற்றும் கே.ரஞ்ஜித்குமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்

இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றில் குற்றப்பகிர்வுப் பத்திரம் எதிரிக்கு வாசித்துக் காட்டப்பட்ட போது 5 குற்றச்சாட்டுக்களுக்கும் எதிரி தான் சுற்றவாளி என மன்றுரை செய்து யூரல் சபை இல்லாத விசாரணையை தெரிவு செய்வதாக தெரிவித்தார்.

அந்த வகையில் குறித்த வழக்கை எதிர்வரும் 27, 28, 29, 30 ஆகிய நாட்களில் தொடர் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டதுடன், மேற்குறித்த வழக்கில் உள்ள 14 சாட்சிகளில் தேவையான சாட்சிகளை ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுத்திருந்தார்.

1 தொடக்கம் 6 வரையான சாட்சிகளான யோகரட்ணம் துசாந்தன், கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம், பொ.கௌரிகாந்தன், தனஞ்சயன் தர்மிகா, தங்கவேல் யசோதரன், க.செல்வநாயகம் முத்து ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும், 7 தொடக்கம் 9 வரையான சாட்சிகளான சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சொரூபன், உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச, பொலிஸ் சாஜன்ட் ராஜபக்ஸ ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறும் ஏனைய சாட்சிகளை அடுத்துவரும் நாட்களில் ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதன்போது ஏதிரி தரப்பு சட்டத்தரணி, குறித்த எதிரி தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வருவதால் பிணையில் விடுவிக்குமாறு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

தொடர் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதால் குறித்த பிணை மனுவை நிராகரித்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை எதிரியை விளக்கமறியில் வைக்க நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

You might also like