வவுனியா நகரசபையின் குழுக்களில் இருந்து இராஜினாமா செய்ய கூட்டமைப்பு முடிவு

வவுனியா நகரசபையின் உப குழுக்களில் இருந்து இராஜினாமா செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா நகரசபையினால் மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டாத நிலையில் தொடர்ந்தும் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கிவர முடியாது.

உள்ளூராட்சி மன்ற விதிகளுக்கு அமைய உப குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் வேலைத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்ற காரணத்தின் அடிப்படையில் மக்கள் வாக்குகளை பெற்று வெற்றி பெறாத தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்திருந்தோம்.

மக்கள் செல்வாக்கினை இழந்து கூட்டாட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் தமது கருத்துக்களையும் தமது கட்சி சார்ந்தவர்களின் கருத்துக்களையுமே முன்னிலைப்படுத்தி வரும் நிலையில் பெயரளவிலேயே குறித்த குழுவில் நாம் பங்கேற்று வர வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதன் ஓர் அங்கமாகவே, தற்போது மக்கள் ஆதரவை தாம் பெறுவதற்காக அரசியல் விழாவாக நடத்தப்படவிருக்கும் விருது வழங்கும் நிகழ்வை நாம் பார்க்கின்றோம்.

குறித்து நிகழ்வு தொடர்பாக நாம் சில விடயங்களை குழுவின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் முன்வைத்த போதிலும் அதனை செவிமடுக்காத தலைவரும் அவர் கட்சிக்காரர்களும் செய்யும் செயற்பாடுகளில் எம்மையும் இணைத்துள்ளதாக தெரிவிக்கும் பொய்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களிலும் மக்கள் பணிகளை தலைவரும் அவர் சார்பானவர்களும் மேற்கொள்ளாது காலத்தை கடத்திவிட்டு உப குழுக்களில் நாமும் பங்கேற்றிருந்தோம் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை தவிர்க்கும் நோக்கோடு வவுனியா நகரசபையின் அனைத்து உப குழுக்களில் இருந்தும் எமது பிரதிநிதிகள் இராஜினாமா செய்ய தீர்மானம் எடுத்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் நகரசபை கலாச்சார குழுவில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 3 பேர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like