சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் : செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு – கல்குடாவில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மது உற்பத்தி நிலையம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை கூட்டங்கள், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள், பிராந்திய அபிவிருத்தி கூட்டங்கள் போன்றவற்றிலும் இந்த சட்டவிரோத மது உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அனாலும் சட்டவிரோதமான முறையில் இந்நிறுவனத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிள் மூலமாக ஊடகவியலாளர்களை பின்தொடர்ந்த நபர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை தம்மீதான தாக்குதல் குறித்த நிறுவனத்தின் ஊழியர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மது உற்பத்தி நிலையமானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிரானது என பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் வியாளேந்திரன் ஆகியோர் தமது கருத்துக்களை வலியுறுத்தியிருந்தனர்.

ஆனாலும் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படாத நிலையில், தற்போது ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like