உயிரிழை அமைப்பின் தலைமை அலுவலகம் மாங்குளத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பிற காரணங்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்துவரும் உயிரிழை அமைப்பின் அலுவலக கட்டம் ஏ9 வீதி, மாங்குளத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.

உயிரிழை அமைப்பின் செயற்பாடுகளை விரிவாக்கும் நோக்கில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியம், பிரம்ரன் தமிழ் முதியோர் அமைப்பு, கனடா, சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட பலரது நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் எதிர்வரும் 30ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட சுமார் 200 இற்கும் அதிகமானோர் வடபகுதியில் வாழ்வதாகவும், அவா்களில் முன்னாள் போராளிகள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அரசசார்பற்ற நிறுவனம்  ஒன்று தெரிவிகின்றனர்

அவ்வாறு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 190 பேருக்கு உயிரிழை என்ற அமைப்பு உதவிசெய்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜெயகாந்தன்,

முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தவர்களில் 27 பேர் கழுத்துப்பகுதிக்கு கீழ் இயங்காதவர்கள் எனவும்,ஏனையவர்கள் இடுப்பு பகுதிக்கு கீழ் இயங்காதவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுதுளி செயற்திட்டத்தின் கீழ் மாதாந்தம் உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள் போதுமானவை அல்ல ஆனாலும் முடிந்தவரை அவர்கள் வாழ்வதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகவுள்ளதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் வவுனியாவில் 24 பேரும், முல்லைத்தீவில் 50 பேரும், கிளிநொச்சியில் 46 பேரும், மன்னாரில்12பேரும், யாழ்ப்பாணத்தில் 37 பேரும் உதவித் தொகையைப் பெறுகின்றனர்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 21 பேர் இந்த உதவித்தொகையைப் பெற்று வருவதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

எவ்வாறாயினும் உயிரிழை என்ற அமைப்பு 2015ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வரும் உதவியால் 190 பேரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சிறப்பான மாற்றம் காணப்படுவதாக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தலைமையகமாகவும், பாதிப்புற்றோருக்கான சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயிரிழை அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like