தொடரும் பொலிஸாரின் ஆவா குழு வேட்டை : இருவர் கைது – கைக்குண்டுகளும் மீட்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவை சேர்ந்த மேலும் இரண்டு உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து யாழ். பிரிவின் சிறப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சமூகவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கொட்டாஞ்சேனை பகுதியில் மேலும் மூவரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் பிரதான உறுப்பினர்கள் அண்மைக் காலத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி நாடு முழுவதிலும் பரவியுள்ளனர் என நேற்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் ஆவா குழு உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் இரண்டு பிரதான சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து அவர்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய கைக்குண்டு, 3 வாள்கள், ஒரு கோடாரி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆவா குழுவை சேர்ந்த 6 பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று கைது செய்யப்பட்ட இரண்டு பிரதான சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

மேலதிக செய்தி – ஸ்டீபன்

You might also like