10 சிறுவர்கள் உட்பட வடக்கில் 60 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு

வடக்கில் 60 பேர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 10 சிறுவர்கள் அடங்குவதாகவும் ஈ.பி.டி.பியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா இன்று சபையில் தெரிவித்தார்.

இவ்வாறு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் பரவுகின்றமைக்கு முறையான கழிவகற்றல் இடம்பெறாதமையே காரணமாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலை உடனடியாக நடத்தி, இதனூடாக அரசு இந்நோய்கள் பரவுதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா,

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயின் பரவலானது மிகவும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கிண்ணியா பிரதேசமானது இதனால் மிகவும் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

கிண்ணியா, திருகோணமலை என கிழக்கில் மட்டுமன்றி வடக்கிலும் டெங்கு நோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகின்றது.

வடக்கு வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் 90 வீதமான நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

அத்தோடு, பன்றிக்காய்ச்சல் நோயும் அங்கு வேகமாக பரவிவருகின்றது. இதனால் வவுனியாவில் மட்டும் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 2 ஆம் திகதி கெப்பட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் குழந்தை பிரசவித்து இரண்டு வாரங்களேயான தாயொருவரும் பலியாகினார்.

கிளிநொச்சியில் மட்டும் கடந்த 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை பன்றிக்காய்ச்சலினால் 10 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று வடக்கில் மட்டும் இதுவரை இந்நோயினால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

மேலும், வடக்கு வைத்தியசாலைகளுக்கு தினமும் 1000 நோயாளர்களெனும் சுவாசப் பாதிப்பினால் வருகைத் தருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த நோயினால் மட்டும் 20 ஆயிரம் பேர் வடக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு முறையான விதத்தில் கழிவகற்றல் மேற்கொள்ளப்படாதமையே காரணமாக அமைந்துள்ளமையால், உள்ளூராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலை உடனடியாக நடத்தி, இந்த நோய் பரவலை அரசு முறையாக தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

You might also like