ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே : வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை (22-03-2017) முன்னெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைப் பேரவையில் 2015 இல் தீர்மானிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடந்த 18 மாத காலப்பகுதிக்குள் எந்தவிதமான பிரச்சனைகளும் தீர்க்கப்படுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினால் கால அவகாசம் வழங்கக்கூடாது அவ்வாறு கால அவகாசம் வழங்குமிடத்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் யுத்த மீறல்கள் போன்றவற்றை நீர்த்துபோகப்பண்ணவதற்கான வேலையை இலங்கை அரசு மேற்கொள்கிறது ஆகவே எக்காரணம் கொண்டும் மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாது என தெரிவித்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்ச்சி முறையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுடன் 27 நாட்களாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

You might also like