இரும்புப் பெண்மணி சந்திரிகாவின் பரிதாப நிலை! நினைத்தது ஒன்று நடந்தது வேறு!

இரும்புப் பெண்மணி சந்திரிகாவின் பரிதாப நிலை! நினைத்தது ஒன்று நடந்தது வேறு!

இலங்கையை ஆட்டிப் படைத்தவர்களில் சந்திரிகாவிற்கு தனியிடம் உண்டு. உலக அரசியல் பரப்பில் பெண்களின் ஆளுமைத் திறனுக்கு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் அரசியல் பயணம் ஓர் எடுத்துக்காட்டு.

ஆசியாவில் முதல் பெண் ஜனாதிபதி என்னும் பெருமையை ஏற்படுத்தியது மட்டுமல்ல, இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் அம்மையார் இருந்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டி பயங்கரவாதம் அற்ற நாட்டை கட்டியமைப்பேன் என்றும், சமாதானத்திற்கான போர் என்று ஆரம்பித்து, தன் அரசியல் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்டி இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இலங்கை அதிகாரப் பீடத்தில் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக இருந்தவர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

ஆனால், அவரின் இன்றைய நிலை? பரிதாபத்திற்குரியதாக அல்லது தன் தந்தையின் கட்சியை காப்பாற்ற முடியாத ஓர் துர்ப்பாக்கியவதியாக அவர் இருக்கிறார்.

சந்திரிகாவின் தந்தையார் எஸ்.டபுள்யு ஆர் டி பண்டாரநாயக்க, 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், இலங்கையின் நான்காவது பிரதமராக இருந்தார்.

எனினும் ஒரு பௌத்த பிக்குவினால் பண்டார நாயக்க சுட்டுக்கொல்லப்பட்டார். கணவன் கொல்லப்பட்ட நிலையில் பண்டார நாயக்கவின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கையில் மூன்று முறை பிரதமராக இருந்திருக்கிறார். உலகின் முதல் பெண் பிரதமர் என்னும் புகழையும் பெற்றுக் கொண்டவர்.

கணவனின் இழப்பிற்குப் பின்னர் துவண்டுவிடாமல் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார். இதேவேளை இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா அம்மையார் செயற்பட்டார்.

தன் தந்தை அரும்பாடுபட்டு உருவாக்கிய கட்சியை எப்பாடு பட்டேனும் காப்பேன் என்பதை சபதமாக எடுத்தவர் சந்திரிகா.

இலங்கை அரசியலில் ஏற்படும் சிக்கல்கள் பௌத்த மேலாதிக்க சக்திகளால் தமிழ் மக்கள் மீது திசை திருப்பபட்டு வன்முறையாக வெடிக்கும் போதெல்லாம் தமிழர்கள் அநாதையாக்கப்பட்டார்கள். இப்போதும் அதே நிலை தான் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் விடுதலைப் புலிகளின் புரட்சி பெரும் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தெரிந்தோ தெரியாமலோ புலிகளோடு பேரம் பேசவேண்டிய தேவை சந்திரிகா அம்மையாருக்கு ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தினருக்கு சரிசமனாக இருந்த விடுதலைப் புலிகளோடு சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது.

புலிகளோடு, அப்போது இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். எனினும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றார், புலிகளுக்கு நாட்டை விற்றுவிட்டார் என்று எதிர்க் கட்சிகள் கூச்சலிட்டன. மறுபுறத்தில் பிரதமராக இருக்கும் ரணில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகின்றார் என்றும் குரல் எழுந்தது.

தந்தையின் உழைப்பினால் வளர்ந்த கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை இருப்பதாக கருதிய சந்திரிகா அன்று ஆட்சியை கலைத்தார். பிரதமர் பதவியை இழந்தார் ரணில். அடுத்து 2004ம் ஆண்டு அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார் சந்திரிகா.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றவும், அடுத்த தலைமுறையினரிடம் கட்சியை ஒப்படைத்து வளர்க்கவும் திட்டம் வகுத்தார். ஆனால், ஆட்சியேறிய மகிந்த, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். காட்சிகளை அவர் அப்படியே மாற்றினார்.

பிரதமராக்கி அழகு பார்த்து, ஜனாதிபதியாகும் நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்த சந்திரிகா அம்மையாருக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவருக்கான பாதுகாப்புக்கள் குறைக்கப்பட்டன.

அச்சமடைந்த சந்திரிகா லண்டன் சென்றார். எதிர்பார்த்தது ஒன்று. நடந்தது இன்னொன்று. பெரும் அதிர்ச்சி. எனினும், பொறுமையாக பத்தாண்டுகள் காத்திருந்தார்.

தன் கட்சியை மீட்டாக வேண்டும், நாட்டில் நடக்கும் அராஜகத்தை ஒழிக்க வேண்டும் என்று மேற்கத்தேய நாடுகளுடனும், ரணில் விக்ரமசிங்கவுடனும் கைகோர்த்தார். இந்த இராஜதந்திர காய் நகர்த்தல்களுக்கு நடுநாயகமாக மகிந்தவின் அமைச்சரவையில் இருந்து மைத்திரிபால சிறிசேன புடுங்கி எடுக்கப்பட்டார்.

தேர்தல் வியூகத்தை வகுத்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். மகிந்த மீது இருந்த தீரா வெறுப்பும் பகையையும் சிறுபான்மையினர் தேர்தல் வாக்குகளாகப்பயன்படுத்தினர். மகிந்த மீதிருந்த வெறுப்பும், பகையும் மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிஷ்டத்தைக் கொடுத்தது. எதிர்பாராத ஒருவர் ஜனாதிபதியாகினார்.

தன் கட்சி காக்கப்பட்டதாக புளகாங்கிதம் அடைந்த சந்திரிகா அம்மையாருக்கு ஆட்சியேறி மூன்றாண்டுகளுக்குள் மீண்டும் மகிந்த ராஜபக்ச பாணியில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

அன்று சந்திரிகா அம்மையார் எப்படி ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினாரோ, அதேபோன்று இன்று மைத்திரிபால சிறிசேன ரணிலை அகற்றி மகிந்த ராஜபக்சவை அதேபாணியில் ஆட்சிக்கு கொண்டுவந்தார்.

எனினும் இம்முறை நீதிமன்றங்களும், எதிர்க் கட்சிகளும் ஒன்றாக நிற்பதனால் கொஞ்சம் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தன் கட்சியை மீட்க முடியாமல் தற்போது சந்திரிகா பெரும் குழப்பத்திலிருக்கிறார். தந்தை பண்டார நாயக்க உருவாக்கிய கட்சியை, தாய் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க வளர்க்க, சந்திரிகா அதனை அதியுச்சத்திற்கு எடுத்துச் சென்றார்.

தனக்குப் பின் அதிகாரத்திற்கு வாரிசுகள் வரமாட்டார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ராஜபக்சவை வளப்படுத்தினார். ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல மகிந்த மாற, திகைத்துப் போனவர் மைத்திரியை களமிறக்கினார், இப்பொழுது அவரும் சந்திரிகாவை எட்டி உதைத்துவிட்டிருக்கிறார்.

இரண்டு முறை ஜனாதிபதியாகி, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்த ஒரு இரும்புப் பெண்மணியை மகிந்த, மைத்திரி இருவரும் ஒரே விதத்தில் விரட்டியடித்திருக்கிறார்கள்.

பெரும் அரசியல் மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்தியவர் சந்திரிகா. தமிழர்கள் மீதான தாக்குதல்கள், வன்முறைகள், அடக்குமுறைகளை அவர் நடத்தியிருந்தாலும், மகிந்தவை வீழ்த்தி மைத்திரி மூலமாக நாட்டை ஒரு இக்கட்டிலிருந்து மீட்டெடுக்கப் பாடுபட்டவர். ஆனால் இன்று அவரும் பெரும் இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலிருக்கிறார்.

இன்று மகிந்த மைத்திரி இருக்கும் கோட்டையாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி இவர்களுக்கு அரசியல் இடத்தைப் பிடித்துக் கொடுத்த பரம்பரையில் வந்தவரை பாதுகாப்புக்கள் குறைத்து, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்னும் சிறப்பு அந்தஸ்தை வழங்காது, அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி அடக்குமுறைகளை ஏவிவிட்ட, சிங்கள பௌத்தத்தை காப்பேன் என்று சபதம் எடுத்த, தங்களின் அரசியல் குருவாகிய சந்திரிகா அம்மையாரையே தெருவில் விரட்டியிருக்கும் சிங்களத் தலைமைகளின் இந்த அதிகார வெறி தமிழர் தரப்பி்ற்கு எந்தளவில் அதிகாரங்களை அல்லது மரியாதையை கொடுக்கும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கமுடியும்.

பாவம் சந்திரிகா யார் கட்சியை பாதுகாப்பார்கள், யார் பலப்படுத்துவார்கள் என்று நம்பினாரோ அவர்களே அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டார்கள்.

You might also like