மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாடு! உலகப் பட்டியலில் இலங்கைக்கு 73வது இடம்!

மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இலங்கை 73வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையானது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

188 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பாலின விகிதம், மக்களின் சராசரி ஆயுட்காலம், பாதுகாப்பு, அரசின் மீதான நம்பிக்கை, நீதித்துறை செயல்பாடுகள், பேறுகால மரணம், கல்வி நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரம் – நாட்டின் பாதுகாப்பு – சமூகத்தில் விரும்பியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை, அரசின் மீது நம்பிக்கை, நீதித்துறை மீது நம்பிக்கை, போன்ற அம்சங்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் நோர்வே முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 147வது இடத்திலும், வங்கதேசம் 139வது இடத்திலும் உள்ளது.இலங்கை 73வது இடத்தையும், மாலைதீவு 105வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. சீனா 90வது இடத்தில் உள்ளது.

You might also like