கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அச்சுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரித் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி மக்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் வழங்கவேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துமாறும் கோரிக் கிளிநொச்சியைச் சேர்ந்த உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுன்றது.

கடந்த சில நாட்களாக இனந்தெரியாத சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தகவல்களைச் சேகரிக்க முற்படுவதும், புகைப்படங்களை எடுப்பதுமாக உள்ளனர்.

மேலும், அவர்களிடம் யார் எனக் கேட்டால் அங்கிருந்து வருகின்றோம், இங்கிருந்து வருகின்றோம் எனத் தெரிவிக்கின்றனர்.

களவுக்காக இவர்கள் வருகின்றார்களா என்றுகூடத் தெரியவில்லை. இதனைக் கருத்தில்கொண்டு பொலிஸார் எமக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like