அக்கராயன் ஆசிரிய வள நிலையத்திற்கான கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி அக்கராயன் ஆசிரிய வள நிலையத்துக்கான கட்டட வேலைகள் தொடங்கியுள்ளன. இருபத்தெட்டு மில்லியன் ரூபாய் நிதியில் இக்கட்டட வேலைகள் நடைபெறுகின்றன.

இரு மாதங்களுக்கு முன்னர் இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கடந்த இருநாட்களாக இவ்வேலைகள் தொடங்கியுள்ளன.

வடமாகாண கல்வி அமைச்சு இதற்கான நிதியினை ஒதுக்கி இருந்தது. 1996ஆம் ஆண்டு கிளிநொச்சி இடப்பெயர்வுடன் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை அக்கராயன் மகா வித்தியாலயத்தில் இயங்கிய போது, அப்போதைய வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த பொன் சபாபதியினால் அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு அருகில் ஆசிரிய வள நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

போர் காலத்தில் இவ் ஆசிரிய வள நிலையம் சேதமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கக் கூடிய நவீன ஆசிரிய வள நிலையம் அக்கராயனில் தற்போது அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலே இரண்டு ஆசிரிய வள நிலையங்கள் உள்ளன.

பரந்தனில் அமைந்துள்ள ஆசிரிய வள நிலையம் கண்டாவளை கோட்டம், கிளிநொச்சி நகர ஆசிரியர்களுக்கான ஆசிரிய வள நிலையமாக உள்ளது.

அக்கராயனில் அமையவுள்ள ஆசிரிய வள நிலையமானது அக்கராயன், பூநகரிப் பிரதேச ஆசிரிய வள நிலையமாக அமைந்தாலும் கூட அமையவுள்ள ஆசிரிய வள நிலையமானது மாடிகளைக் கொண்ட கட்டடமாக அமையவுள்ளது.

தற்போதுள்ள கட்டடமும் புனரமைக்கப்பட்டு ஆசிரியர்கள் தங்கி நிற்கக் கூடிய வசதிகள் உருவாக்கப்படவுள்ளது.

You might also like