கிளிநொச்சியில் அமைக்கப்படும் விவசாய கிணறுகளால் ஆபத்து

கிளிநொச்சியில்   விவசாயத்திற்காக அவசரமாக அமைக்கப்பட்ட கிணறுகளில் வீழ்ந்து கால் நடைகள் இறப்பதனால் அவற்றினை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்டச் செயலகம் முன்வர வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளணச் செயளாலர் மு.சிவமோகன் வேண்டுகோள் விடுத்தார்.

 கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே செயலாளர் மேற்படி கோரிக்கையினையும் முன் வைத்தார்.இது தொடர்பில் சம்மேளணச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,

 கிளிநொச்சியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நெற்பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் அவசர அவசரமாக பல கிணறுகள் இயந்திரங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டே பயிர்கள் காப்பாற்றப்பட்டன. இருப்பினும் இவ்வாறு   விவசாயத்திற்காக அவசரமாக அமைக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட கிணறுகள் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றியே காணப்படுகின்றது.

 இவ்வாறு காணப்படும்  கிணறுகளில் இதுவரை 3 மாடுகள் வீழ்ந்து இறந்து விட்டன

எனவே விவசாயிகளான நாம் எமது வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டு கால் நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை அழித்தோம் என்ற பழிச் சொல்லிற்கு ஆழாக நாம் விரும்பவில்லை. பல கால் நடை வளர்ப்பாளர்களும் அதனையே நம்பி வாழ்கின்றனர். எனவே பாதுகாப்பற்ற கிணறுகளில் வீழ்ந்து கால் நடைகள் இறப்பதனால் அவற்றினை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டே ஆகவேண்டிய கட்டாய தேவை உள்ளது.இவ்வாறு பாதுகாக்க வேண்டிய கிணறுகளின் எண்ணிக்கை ஒரு சில எனில் விவசாயிகளினால் மட்டும் பாதுகாக்க முடியும் இருப்பினும் குறித்த எண்ணிக்கை 50ஐ தாண்டிய நிலையில் கானப்படுவதனால் இது தொடர்பில் மாவட்டச் செயலகமும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும் இவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் குறித்த கிணறுகளை மூடியாவது கால் நடைகளையும் பாதுகாக்கவேண்டிய தேவையும் உள்ளது. என்றார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் ,மாவட்டத்தில் நிலவிய வறட்சியை தடுக்க அவசரமாக ஏற்படுத்தப்பட்ட கிணறு என்றாலும் குறித்த பகுதி விவசாயிகளுக்கு அவை தொடர்ந்தும் நன்மை பயக்கும் எனக் கண்டறியப்பட்டால் அவற்றினை நிரந்தரமாக பாதுகாப்பதே பொருத்தமானதாக இருக்கும் பணத்தை செலவு செய்து தோண்டிய கிணறுகளை பணத்தை செலவு செய்து மூடுவது மட்டும் தீர்வாகாது. எனவே அவற்றினை கட்டிப் பாதுகாப்பதற்கான நிதி ஈட்டல் தொடர்பில் ஆராய்ந்து முடிவை எட்டமுடியும் . எனப் பதிலளித்தார்.

You might also like