வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் அவசர அறிவித்தல்

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் இன்று (24) பிற்பகல்-01 மணியுடன் நிறைவடையவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை பதிவு செய்யப்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான விபரங்கள் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர வேலைவாய்ப்புக்களை வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடாத்தி வரும் போராட்டம் இன்று 26 ஆவது நாளாகவும் தீர்வின்றித் தொடர்கின்றது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான முழுமையான விபரங்கள் வடக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இல்லாத நிலையில், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகப் போராட்டக் களத்திற்கு வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தது.

இதற்கமைய வடமாகாணத்திலுள்ள பட்டதாரிகள் பலரும் தமது விபரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

எனினும், இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் இன்று பிற்பகல்-01 மணிக்கு முன்னர் போராட்டக் களத்திற்கு விரைந்து தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பதிவு செய்யப்படாத வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் பின்னர் ஏற்படும் எந்தவொரு அசெளகரியத்திற்கும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் பொறுப்பேற்காது எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like