கொழும்பில் இரு தமிழர்கள் வெள்ளைவான் கடத்தல் விவகாரம் : விசாரணைக்கு மறுக்கும் தளபதி

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு தற்போதைய கடற்படைத் தளபதி ஒத்துழைப்புத் தருவதில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று (23) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

அந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்தது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்தனர்.

அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகராக இருந்த சுமுத சுதேஷ் விஜேசிங்க என்பவர், இந்தக் கடத்தல் தொடர்பில் இரகசிய விசாரணை நடத்தியதாகவும் அந்த அறிக்கையை, குற்றப்பிரிவின் அத்தியட்சகராக இருந்த அநுர சேனநாயக்கவிடம் கொடுத்தபோது, அதை வைத்திருக்குமாறு அவர் கூறியதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று சீ.ஐ.டியினர் குறிப்பிட்டனர்.

அந்தவகையில், அக்காலப்பகுதியில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரிவின் அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளனவென்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டினன் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவை, ஏப்ரல் 6 ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தம்மிக அனில் மாபாவின் பிணை தொடர்பில் நேற்று அறிவிக்கப்படும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், பிணை உத்தரவின் அரைவாசியே எழுதப்பட்டுள்ளது, என அறிவித்த நீதவான், அடுத்து வரும் விசாரணைகளின் போது அது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

You might also like