மன்னாரில் மீனவர் காயங்களுடன் சடலமாக மீட்பு – இரு கடற்படையினர் கைது

மன்னாரில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவரொருவர் தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு விடத்தல் தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பிள்ளையொன்றின் தந்தையான தாசன் கில்மன் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் நேற்று இரவு கடலில் படகு ஒன்று மூழ்கியுள்ளதாகவும் அதனை சென்று பார்வையிடுமாறும் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதன் போது சக மீனவர்கள் படகுகள் மூலம் குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்ட போது முதலில் படகு மீட்க்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல்களின் போது குறித்த மீனவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது உயிரிழந்த மீனவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பாரிய காயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மீனவர் கடற்படையினரின் படகு மோதியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாக விடத்தல் தீவு கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து விடத்தல் தீவு கடற்படை முகாமை நேற்று இரவு முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு அருட்தந்தையர்கள், கிராம அலுவலகர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் விரைந்து சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தும் இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.

இதனைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் குறித்த விடயத்தை பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், மக்களின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அடம்பன் பொலிஸார் சம்பவ தினம் கடலில் படகில் பயணித்த இரண்டு கடற்படை வீரர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்கள் இருவரும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,

விடத்தல் தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீனவர்களின் படகுகள் மீது கடற்படையினரின் படகுகள் மோதி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையிலே இந்த விபத்தும் அவ்வாறே இடம் பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பாக துரித விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பள்ளமடு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like