விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியின் கன்னத்தில் அறைந்த கல்லூரி மாணவி

சென்னை விமான நிலையத்தில் டிக்கெட்டை காண்பிக்காமல் சென்ற அகமதாபாத் கல்லூரி மாணவிகளை தடுத்த போது லேசாக கை பட்டதால் மத்திய பாதுகாப்புப் படை வீரரின் கன்னத்தில் ஒரு மாணவி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரரின் கை பட்டதால் ஆத்திரமடைந்த அகமதாபாத் மாணவி ஒருவர் அந்த வீரரை கன்னத்தில் அறைந்தார்.

அகமதாபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் பசாந்தி உள்பட 3 பேர் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்னை வந்திருந்தனர்.

நேற்று மாலை அவர்கள் மீண்டும் அகமதாபாத் திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.

உள்நாட்டு முனையம் நுழைவு வாயிலில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அபிலேஷ்குமார் மாணவிகளிடம் விமான டிக்கெட்டை காண்பிக்குமாறு தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டு விடுவோம் என்ற பதற்றத்தில் மாணவிகள் டிக்கெட்டை காண்பிக்காமல் உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் தடுத்து நிறுத்தினார். இதில் மாணவி பசாந்தி மீது அபிலேஷ்குமாரின் கை லேசாக பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அபிலேஷ் குமாரின் கன்னத்தில் அறைந்தார்.

இது குறித்து விமான நிலைய போலீஸார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.

இரு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து சமாதானமாக சென்றதை அடுத்து, விமான நிலையத்தில் நீடித்த பதற்றம் தணிந்தது.

You might also like