மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன்: 4 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுத்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Biel நகரில் 75 வயதான நபர் ஒருவர் அவருடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவரை விட்டு பிரிய மனைவி திட்டமிட்டுள்ளார்.

ஆனால், மனைவிக்கு விவாகரத்து வழங்க கணவர் மறுத்துள்ளார். மேலும், அவரை தனியாக பிரிந்துச் செல்லவும் அவர் அனுமதி அளிக்கவில்லை.

எனினும், இருவருக்கும் இடையே தகராறு முற்றியவாறு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தபோது ‘வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றால் வீட்டோடு உன்னை வைத்து எரித்து விடுவேன்’ என கணவர் மிரட்டியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், வீட்டை வெடி வைத்து தகர்க்க சொந்தமாக வெடிகுண்டையும் அவர் தயாரித்துள்ளார்.

இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து பொலிசார் கணவரை கைது செய்தனர். மேலும், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

எனினும், மனைவியை கொல்ல அவர் முயலவில்லை எனவும், வீட்டை மட்டுமே சேதப்படுத்த அவர் முயன்றதாக நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி கணவர் மீது குற்றம் இருப்பதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1,800 பிராங்க் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

You might also like