கிளிநொச்சியில் சமுர்த்தி அலுவலகத்துக்குள் 2 பெண் ஊழியர் கைகலப்பு ஒருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி சமுர்த்தித் திணைக்கள அலுவலகத்துக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சமுர்த்தித் திணைக்களத்தில் பணியாற்றிவரும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் தனிப்பட்ட தகராறு காரணமாக அங்கு பணியாற்றும் சக உத்தியோகத்தரான பெண்ணைத் தலைமை அதிகாரி முன்னிலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தையடுத்து தாக்குதலுக்கிலக்கான பெண் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலைப் பொலிஸார் கூறினர். கரைச்சிப் பிரதேச செயலாளரிடமும் இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
பிரதேச செயலாளரிடம் இது குறித்து கேட்கமுயன்றபோதிலும் தொலைபேசி அழைப்புக்கு அவர் பதிலளிக்கவில்லை.