வவுனியாவில் அகற்றப்பட்ட நடைபாதையில் மீண்டும் வியாபார நடவடிக்கை: மக்கள் விசனம்
வவுனியா – இலுப்பையடி தின சந்தைக்கு முன்பாக உள்ள சந்தை சுற்று வட்ட வீதியில் இரு பகுதிகளிலும் மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதால் பொதுமக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் அப்பகுதியில் நகரசபையினரால் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அவை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக அனைத்து நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது அப்பகுதியில் பலர் நடைபாதையில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் மரக்கறிகளை விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மீண்டும் நடைபாதை ஓரங்களில் இருபுறமும் மரக்கறிகளை வைத்து வியாபாரம் மேற்கொண்டு வருவதால் அப்பகுதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகயை கட்டுப்படுத்தி மக்கள் அவ்வீதியூடாக சிரமமின்றி சென்று வருவதற்கு நகரசபை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.