காதல் வாழ்க்கை சிறக்க…ஒரு முறை படியுங்களேன்

காதல் வாழ்க்கை சிறக்க…ஒரு முறை படியுங்களேன்

காதல் வாழ்க்கையும் சிறப்பாக அமையுமாறுதான் ஒருவன் வாழ்க்கையை திட்டமிடவேண்டும்.

[ இந்தக் கட்டுரையை எழுதும் + படிக்கும் சௌகர்யம் பொருட்டு ஆண்பாலில் எழுதப்பட்டாலும், ஆண் பெண் இருவருக்குமே பொருந்துவதுதான். ]

வாழ்க்கையைப் பொருளுள்ளதாக ஆக்குவதில் காதலுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.

காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு ஏற்ப ஒருவன் தன்னை அமைத்துக்கொள்ளும் போது, நிறைய சுய பரிசீலனை, மாற்றம், வளர்ச்சி அனைத்தும் ஏற்படுகின்றன.

குறிப்பாக பாரதீயப் பண்பாட்டு திருமண வாழ்வு அதற்கு ஏற்பவே மிகுந்த அறிவுப்பூர்வமாக, கவனமாக, அன்புபூர்வமாக, அக்கறையுடன் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது, முன்னோர்களால்.

அதில் முக்கியமான ஒரு அம்சம் – திருமணம் முதல் வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவி இருவரும் மரணம் சேர்ந்தே வாழ்வது.

இருவருக்கிடையே வளரும் காதல் என்பது….

முதலில் ஏக்கத்தில் தான் துவங்குகிறது. இது ஆண் பெண் இருவருக்குமே நன்கு தெரிந்து இருக்கவேண்டும் + எப்போதுமே நினைவில் இருக்கவேண்டும்.

ஏனெனில், இதுதான், அதாவது இந்த ஏக்கம் தான் காதலை தொடர்ந்து பாதுகாப்பது + வளரச்செய்வது.

அதாவது ‘ஏதோ ஒரு அம்சம் தன்னை திருப்தி செய்யும் – பூர்த்தி செய்யும், தன் இயலாமையில் கைகொடுக்கும் ஒரு அம்சம் – இன்னொரு நபரிடம் இருக்கிறது, …. அதன் துணை எனக்கு வேண்டும்’ – என்ற நிலை – அதனால் வரும் மன உணர்வு – அதுதான் ஏக்கம் என்பது. பற்றிப் படர ஏங்கும் இந்த மனநிலைதான் இன்னொரு நபர்மேல் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது.

உண்மையில் இந்த ஏக்கம் வரும்போது ஒருவன் இயலாமையில் இருக்கிறான். அந்த ஏக்கத்தை தீர்க்கும் வேறு ஒரு நபர் இந்த நபருக்கு அந்த நேரத்தில் ஒரு பெரிய உதவியை செய்கிறார்.

அதனால் அந்தநபர் துணை என்று கூறப்படுகிறார். உண்மையில் அந்த வேறு ஒரு நபர், அதாவது துணை – இந்த இடத்தில் ஏமாற்றவும் முடியும். ஏனெனில் ஏக்கம் என்பது உண்மையில் இயலாமையில் வந்தது.

அதனால்தான் என்னவானாலும் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கும் ஒரு வாழ்க்கைத் துணை தேவை. ஏனெனில் பிரிந்து செல்ல வாய்ப்பு இருக்கும் , வரும் , என்னும் நிலையில்தான் இன்னொரு நபருக்கு ஏமாற்ற வேண்டிய அவசியமோ, நிலையோ,… வருகிறது. மரணம் வரை ஒன்றாகவே வாழ்ந்து இறக்க வேண்டியதுதான் எனும்போது ஏமாற்றுதல் என்பது நினைக்கவும் வாய்ப்பு இல்லாத ஒரு விஷயம். அதனால்தான் ‘பாரதீயப் பண்பாட்டுத் திருமண வாழ்வு’ உலக அரங்கில் வெற்றிகரமான + நிகரற்ற கட்டமைப்பாக இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.

தனது குழந்தைகளுக்கு நன்மையையே நினைக்கும் பெற்றோர்களும், அவர்களுக்கு நிலையான நன்மையை செய்யும் பொருட்டு, தங்கள் வாழ்வில் கிடைத்த அனுபவங்களின் துணையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதுதான் சிறப்பு , வேறு வழி இல்லை என்பதால் இதனையே தங்களது குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.

சிறுவயதில் , ஏக்கத்தாலும், ஆனால் அனுபவக் குறைவினாலும், ஒருவனுக்கு இது ஒரு குறைபாடு உள்ள முறையாகத் தோன்றலாம்.

உலகில் குறையே இல்லாத எந்த ஒரு முறையும் கிடையாது, நிறையே இல்லாத எந்த ஒரு முறையும்கூட கிடையாது, ஆனாலும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறை அதிகமாகவும், குறை குறைவாகவும் இருக்கவேண்டும்.

அந்த விதியின் படி இந்த பாரதீய திருமண முறை, உலக அரங்கில் வெற்றி கொடுப்பதில் முன்னிலையில் இருக்கிறது – ஒப்பீட்டுக் கணக்கின் அடிப்படையில்.

அது இருக்கட்டும். நமது இப்போதைய விஷயத்திற்கு வருவோம்.

உண்மையில் இந்த ஏக்கம் வரும்போது ஒருவன் இயலாமையில் இருக்கிறான். அந்த ஏக்கத்தை தீர்க்கும் வேறு ஒரு நபர் இந்த நபருக்கு உடன் இருந்து, உதவி, அந்த நேரத்தில் ஒரு பெரிய உதவியை செய்கிறார். அது ஒரு சுகத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் வந்த நன்றி உணர்ச்சியும், இதே சூழ்நிலையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு ஆசையும் எழுகிறது. இந்த உணர்வுக்குப் பெயர் காதல்.

உண்மையில் காதல் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் முழுமையான பரிமாணத்திற்கு வருகிறது.

உண்மையில் – அது கிடைத்து பூர்த்தியாகும்போது அதைக் கொடுத்த இன்னொரு நபர் மேல் இருக்கும் ஏக்கம் முடிகிறது. வெறுக்கவில்லை என்றாலும் கூட கவர்ச்சி குறைகிறது.

இது உண்மையில் ஒரு சிக்கலான இடம் – சிந்திக்கவும் – புரிந்துகொள்ளவும்.

ஏக்கத்தை, கவர்ச்சியை தொடர்ந்து பாதுகாக்க இன்னொரு நபருக்கு மேலும் மேலும் கொடுப்பதற்கு விஷயத்தை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கொடுக்கும் விதத்திலும் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.

குறிப்பாக இன்னொரு நபரை புரிந்துகொள்ளுதல், அவர்களின் உணர்ச்சிகளை மதித்தல், தவறுகளை முதலில் பொறுத்துக்கொண்டு, பிறகு நல்ல சூழ்நிலையில் அன்பாக எடுத்துக்காட்டுதல், தவறுகள் இருந்தாலும்கூட முன்பு இருந்த அன்பும் அக்கறையும் குறையாமல் இருத்தல், சிரமத்தில் உடன் இருத்தல், நிறைகளை மதித்தல் + பாராட்டுதல், பேசுவதை காதுகொடுத்துக் கேட்டல், தனிப்பட்ட விருப்பங்களுக்கு சுதந்திரம் கொடுத்தல்,….. போன்றவைகளில்.

இன்னொரு நபரின் தவறுகளை சரிசெய்ய நினைக்கும் போதுகூட….

இந்த நபரின் இந்த தவறுகள் உலகில் யாருக்கு பிரச்சினையோ அவர்கள் அதை செய்துகொள்ளட்டும். எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த நபர் இப்படியே இருக்கலாம். ஆனாலும் அவரது இந்த தவறு தெரியாததினால் சமுதாயத்தில் பல சிரமங்களை அவர் சந்திக்கவேண்டி வரலாம். அந்த சிரமத்தைக் குறைக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன். அதற்காக நான் அதனை சொல்லவேண்டி இருக்கிறது. அப்படி நான் சொல்லும்போது அவரால் ஏற்கமுடியலாம், அல்லது பல காரணங்களால் இப்போதைக்கு ஏற்க முடியாமலும் போகலாம். அந்த காரணங்கள் எல்லாம் எனக்கு தெரிந்து இருக்கவேண்டும் என்பது இல்லை. அது அந்த நபரின் பிரச்சினை. நான் சொல்ல வேண்டியதை சொல்லி வைத்தால், அது அவருக்கு , சரி என்று தோன்றும்போதோ அல்லது அதனை ஏற்க முடியும் சக்தியோ அனுபவமோ வரும்போதோ ஏற்கட்டும். அந்தக் குறை இருப்பதால் எனக்கும்கூட சில சிரமம் இருக்கலாம். பரவாயில்லை. உலகில் எங்கே இருந்தாலும் எதனை செய்துகொண்டு இருந்தாலும் சிரமங்களை தவிர்கமுடியாது. ஏதோ சிரமத்திற்கு இது பரவாயில்லை, எனது நபர்தானே.’ என்ற உணர்வுடன்,

சுருக்கமாக …
அழகாகச் சொன்னாள் ஒரு தாய் தன் குழந்தையின் தவறுகளில் நடந்துகொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டியதுதான்.

அறிவுப்பூர்வமாக சொன்னால், ஒருவன் தனது தவறுகளின் விஷயத்தில் எப்படி தனக்கு விட்டுக்கொடுத்து, திருந்த வாய்ப்புக் கொடுத்து செல்கிறான், இதே விதத்தில் தனது துணையையும் தன்னில் ஒரு பகுதி என்று நினைத்து, தானே அப்படி இருந்தால் என்ன செய்யப்போகிறேன், என்று நினைத்து நடந்துகொள்ளவேண்டியதுதான்

அதனால் வரும் சில சிரமங்களை தாங்கிப் பழகவேண்டும், நஷ்டங்களைத் தாங்கிப் பழகவேண்டும், அதில் தான் அந்த ஒருவன் உயருகிறான். அந்த உயர்வுக்கு இதுதான் விலை. அதனால் இதில் நஷ்டம் ஒன்றுமே இல்லை – தனது உயர்வினை மதித்தால்.

பணம், பதவி, புகழ்,… போன்றவைகளை மட்டுமே மதித்தால் இது நஷ்டமாகத் தோன்றும்.

‘இவ்வளவெல்லாம் செய்யவேண்டும் என்றால் அதற்கு கல்யாணமே இல்லாமல் இருந்துகொள்ளலாமே’ என்று ஒருவருக்குத் தோன்ற முடியும்.

உண்மையில் ஒருவனுக்கு, எல்லாவற்றையும் தனக்குத் தானே செய்து , திருப்தியடையும் வாழ்வை விட , இன்னொருவருக்காக செய்து உதவி வாழும் வாழ்க்கையில்தான் மனிதனது மனம் திருப்தி அடைகிறது, பூர்த்தி அடைகிறது. அதை ஒருவன் இழக்கக்கூடாது.

வாழ்க்கையில் ஒருஜீவனையாவது சந்தோஷப் படுத்தி திருப்திப்படுத்தி வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் வரும் திருப்தியை, பூர்த்தி உணர்வை அனுபவிக்கவேண்டும்.

பணம் சம்பாதித்தல், தொழிற்சாலைகளை நடத்துதல் போன்று பல கார்யங்களை செய்துவிட்டு, இந்த அனுபவம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை வெறுமையாக ஆகிவிடும். அதனால் இதனை பிறர் வெற்றி என்று பாராட்டினாலும், இந்த வாழ்க்கை ஒருவனுக்கு நல்லதில்லை. ஒரு திருப்தியை, ஒரு பூர்த்தி உணர்வை தராது.

இந்த உண்மைக்கு ஏற்பத்தான் ஒருவன் தன் வாழ்வை திட்டமிடவேண்டும். தனது சந்ததிகளின் வாழ்வையும் திட்டமிடவேண்டும். கற்றுத்தரவேண்டும்.

ஒரு விஷயம் கவனம்: இன்னொரு நபரின் உதவியினால் நான் சிரமமின்றி வாழப்போகிறேன். அதற்காகத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். என்ற உணர்வு நல்லது இல்லை.

இன்னொரு நபரை சந்தோஷமாக வழவைத்துப் பார்க்கப்போகிறேன். என்னையே நான் மதிப்பிடவும், உயர்த்திக்கொள்ளவும் விரும்புகிறேன். அதற்காகத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். என்ற உணர்வு நிச்சயம் ஒருவனை உயர்த்தும்.

அதற்கு இந்த விலை கொடுக்கலாம்.

தகுதி உள்ள செயல். புத்திசாலித்தனமான செயல்.

இனிய காதல் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். 🙂

You might also like