தகுதியற்ற நிர்வாகத்தால் வவுனியாவில் கூட்டுறவுச்சங்க கிளைகள் பல மூடப்பட்ட நிலை : மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு தகுதிற்ற நிர்வாக செயற்பாடே காரணமென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட 35 கிளைகள் கடந்த காலங்களில் இயங்கி வந்த நிலையில் தற்போது 10 கிளைகள் மாத்திரமே இயங்கும் நிலையில் காணப்படுகின்றது.

கிராம மட்டங்களில் காணப்பட்ட பல கிளைகள் மூடப்பட்டமையினால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் வேலைவாயப்புகளும் முடக்கப்படும் நிலை காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினரின் சீராக வழிநடத்தலின்மை மற்றும் சங்க நிர்வாகத்தின் பொருளாதாரம் சார் பார்வையின்மையே இதற்கான காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் முத்தையா, வீரசிங்கம், நடராஜா, பத்மநாதன், சுப்பிரமணியம் (வேலுச்சேமன்), ஞானப்பிரகாசம் ஆகியோரின் காலங்களில் வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம் வட கிழக்கில் முதன்மைச்சங்கமாக செயற்பட்டு வந்திருந்தமையையும் பொதுமக்கள் இந்த நிலையில் கூட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல வர்த்தக நிலைய கட்டடங்கள் சீரான கேள்வி கோரல்கள் மூலம் காலத்திற்கு காலம் விடப்படாமையினால் சில தனிப்பட்ட நபர்கள் அதனை உரிமைகோரும் நிலையும் காணப்பட்டு வருகின்றமையும் சங்கத்தின் வருமான இழப்பிற்கு காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் குறைந்த வாடகையில் நகர்ப்புற வர்த்தக கட்டடங்களை பெற்றவர்கள் அதனை வேறு நபர்களுக்கு அதிகளவான வாடகைக்கும் வழங்கி வருவதும் சங்கத்திற்கான வருமான இழப்பினை ஏற்படுத்துவதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 1 ஆம் திகதி வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெறவுள்ளமையினால் புதிய நிர்வாகம் மூடப்பட்ட கிளைகளை திறப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like