ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து

தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடயமாக ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் காணப்படுகின்றது.

அரசியல் தரப்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த பயணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை” என தனது திட்டவட்டமான முடிவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்காக லைக்கா நிறுவனம் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு ரஜினியும் சம்மதம் வெளியிட்டிருந்த நிலையில், பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிவந்திருந்தன.

குறிப்பாக திருமாவளவன், வைகோ ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், இலங்கை தரப்பிலிருந்தும் சில எதிர்ப்புகள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையின் ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிக்கொண்டு இலங்கை விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

இலங்கை சென்று பூமிக்குள் புதைந்திருக்கும் மாவீர மண்ணை வணங்கி, மாவீரர்கள் நடமாடிய இடங்களை பார்வையிட்டு, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.

ஆனால் இவை அனைத்தும் கனவாகி விட்டன. அரசியல் காரணிகள் இதை பெரிதுபடுத்தி விட்டதால் இதை நான் தவிர்த்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படுமானால் தயவு செய்து அதையும் தடுத்து விடாதீர்கள் எனவும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You might also like