போலி ஐ.நா அதிகாரியால் இலங்கை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்! பொலிஸார் வலைவீச்சு

ஐக்கிய நாடுகளின் பிராந்திய அமைப்பாளர் எனக் கூறிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்து விட்டு தப்பிச் சென்ற ஒருவரை தேடி தம்புள்ளை பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

தம்புள்ளை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தை சேர்ந்த சிலர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் சந்தேகநபர் கம்பளை, குறுந்துவத்தை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

இந்த நபர் கம்பளை, கண்டி, மாத்தளை, தம்புள்ளை, கொக்கிராவை, கேகாலை, குருணாகல் உட்பட பல பிரதேசங்களில் விவசாய கிணறு, உழவு இயந்திரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெற்றுத் தருவதாக கூறி பல காலமாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தம்புள்ளை, பல்வெஹேர மற்றும் வார சந்தைக்கு அருகில் இரண்டு வீடுகளில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து தரப்படும் விவசாய வாகனமான உழவு இயந்திரத்தை பெற்றுக்கொள்ள பதிவு கட்டணமாக ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை இந்த நபர் சில பிரதேசங்களில் பெற்றுக்கொண்டுள்ளார்.

உரிய தினத்தில் உழவு இயந்திரம் கிடைக்காத காரணத்தினால் மோசடியில் சிக்கிய சிலர் சந்தேகநபர் தங்கியிருந்த அறையை முற்றுகையிட்டுள்ளனர்.

அப்போது சந்தேகநபர் பயன்படுத்திய பொருட்களை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அறையில், இருந்து பெறுமதியான ஆடைகள், வாசனை திரவியங்கள், காலணிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்களிடம் பெற்றுக்கொண்ட அடையாள அட்டைகளின் பிரதிகள், காணி உறுதிகள், புகைப்படங்கள், தொலைபேசி இலக்கங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like