கற்பழிக்கப்பட்டதாக நாடகமாடிய பெண்: பொலிசாரிடம் கூறிய வினோதமான விளக்கம்

கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாக நாடகமாடியது பொலிசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் 48 வயதான பெண் ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் 7-ம் திகதி பொலிசாரிடம் ஒரு பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.

அதில், ‘சாலையில் நடந்து வீட்டுக்கு செல்லும்போது தன்னை மர்ம நபர் ஒருவர் கற்பழித்து விட்டதாக’ கூறியுள்ளார்.

பெண்ணிடம் புகாரை பெற்ற பொலிசார் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவை பரிசோதனை செய்துள்ளனர்.

கமெராக்களில் கற்பழிப்பு காட்சிகள் அல்லது பெண்ணை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.

மேலும், அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை நடத்திய பிறகு கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து புகார் கொடுத்த பெண்ணை மீண்டும் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய பெண் தான் கற்பழிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு நாடகமாடியதாக உண்மையை ஒப்புக்கொண்டார்.

மேலும், ‘இரவில் வீட்டிற்கு திரும்பியபோது அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்து என்னால் சரியான நேரத்தில் அலுவலகப்பணிக்கு செல்ல முடியவில்லை. தாமதமானால் தன்னுடைய பணி பறிக்கப்படும் என்ற அச்சத்தால் இவ்வாறு நாடகமாடினேன்’ என பொலிசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், பொலிசாரை ஏமாற்றியக் குற்றத்திற்காகவும், பொலிசாரின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது பெண்ணிற்கு 1,000 டொலர் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் நலனிற்காக சில சமூகப்பணிகளை 100 மணி நேரத்திற்கு செய்துக்கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You might also like