வில்பத்து பிரதேச மீள்குடியேற்றங்களுக்குத் தடை! பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்

வில்பத்து மட்டுமன்றி அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பது மீள்குடியேற்ற நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இரண்டரை தசாப்தங்களாக இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் கடந்த சில வருடங்களாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

எனினும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் இடங்கள் வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பிரதேசத்துக்கு உரித்தானது என்று இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வில்பத்து மட்டுமன்றி அதனைச் சூழவுள்ள பாரிய பிரதேசங்களையும் , அதனுள் உள்ளடங்கியிருந்த பொதுமக்களின் முன்னைய வாழ்விடங்களையும் பாதுகாக்கப்பட்ட வனாந்திரமாக பிரகடனப்படுத்தப்படும் அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

வில்பத்து வனாந்திரத்துக்கு வடக்குப் புறமாக அமைந்திருக்கும் விளாத்திக்குளம், மாவில்லு, மரிச்சுக்கட்டி, பெரியமுறிப்பு உள்ளிட் ஆறு பிரதேசங்களை உள்ளடக்கி மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பிரதேசமாக நேற்றைய தினம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தி இருந்தார். ரஷ்ய சுற்றுப் பயணத்தின் இடைநடுவில் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தமை பரபரப்பாக பேசப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதியின் அறிவித்தல் மூலம் அப்பிரதேசங்களில் வாழ்விட உரிமை கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படுவதுடன், தொடர்ந்தும் அவர்கள் அகதி முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சிவில் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like