சரணடைந்த தனது மகனை விடுதலை செய்வதற்கு இலஞ்சம் கோரினர் :- கிளிநொச்சியில் குமுறல்

2009 ஆம் ஆண்டு இறுதி கட்ட யுத்தத்தில் சரணடைந்த தனது மகனை விடுதலை செய்வதற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தியோர் இலஞ்சம் கோரியதாக தந்தை ஒருவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 35 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 24 ஆம் திகதி முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மாத காலம் கடந்த நிலையில் இடம்பெற்றுவருகின்றது.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தநிலையில் காணாமல்ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்கவேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

You might also like