இரண்டு தலைமுறையாக எமக்கு காணியில்லை : பன்னங்கண்டி மக்கள்

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் யுத்தத்தின் பின்னரான சூழலில் தமது குடியிருப்பு தேவையை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்ஒர் பகுதியாக தமது குடிருப்பு காணிக்கான காணி அனுமதிப்பத்திரம் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பன்னங்கண்டி கிராமத்தின் சரஸ்வதி குடியிருப்பு மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்கள் இன்று 4வது நாளாகவும் முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் நிலவிய கலவரங்கள் மற்றும் யுத்த சூழல்களால் இடம்பெயர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

இவ்வாறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி கிராமத்திலுள்ள சரஸ்வதி குடியிருப்பு மற்றும் ஜொனிக் குடியிருப்பு பகுதி மக்கள் இன்று 4வது நாளாக தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த காணியின் உரிமையாளருக்காக நீண்டகாலமாக உழைத்து கொடுத்த இந்த மக்களுக்கு 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் அந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இறுதிக் கட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அந்த மக்கள் தற்போது மீள் குடியேறியுள்ள போதிலும் குடியிருக்கும் காணிக்கு, அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் பல்வேறு அசௌரியங்களை எதிர்நோக்கிவருவதாக குறிப்பிடுகின்றனர்.

காணி அனுமதிப் பத்திரமில்லாத காரணத்தால் நிரந்தர வீட்டுத் திட்ட வசதிகளும் இதுவரை வழங்கப்படவில்லை என குறிப்பிடும் அவர்கள்,  கடந்த இரண்டு தலைமுறையாக பன்னங்கண்டி பகுதியிலேயே வசித்துவருவதாக கூறுகின்றனர்.

எதிர்கால சந்ததியின் வாழ்க்கைக்காக தாம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி கிராமத்திலுள்ள சரஸ்வதி குடியிருப்பு மற்றும் ஜொனி குடியிருப்பு மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி அவர்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கி பல்வேறு அழிவுகளை சந்தித்த வட பகுதி மக்களின் இருப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் கடமையாகும்.

You might also like