அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்தமை குறித்து விளக்கம் சொல்லும் இராணுவம்

போர்க்குற்றச் செயல்கள் குறித்த குற்றச்சாட்டு போலியானது என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

போர்க்குற்றச் செயல் குறித்த குற்றச்சாட்டுக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை.

உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நாம் அழித்துள்ளோம்.

பொதுமக்களை மிகவும் நுட்பமான பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தி போரின் போது மீட்டு எடுத்துள்ளோம்.

புலித் தலைவர்கள் போரில் கொல்லப்பட்டனர். அந்த அமைப்பின் உறுப்பினர்கள் எங்களிடம் சரணடைந்தனர்.

எனவே போர்க்குற்றச் செயல்கள் என்பது போலியாக உருவாக்கப்பட்டவை.

வெளிவிவகார அமைச்சர் படைவீரர்களை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார். மேற்குலக நாடுகளுடன் இணைந்து இவ்வாறு செய்கின்றார்.

படைவீரர்களை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்றே ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர்.

அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. எனினும் ஜனாதிபதி எமது படையினரை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுண்டு.

படையினர் மீதான போர்க்குற்றச் செயல்களை அரசாங்கம் நிராகரித்து, படையினர் எவ்வாறான மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள் என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.

நாம் அப்பாவி மக்களை கொலை செய்யவில்லை. எனவே நீதி விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு நாம் குற்றச் செயலில் ஈடுபட்டதாக எவ்வித சாட்சியங்களும் கிடையாது.

ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு குழுக்கள் உருவாக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. இராணுவத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இருக்கவுமில்லை.

நாட்டுக்கு பாரியளவில் சேவையாற்றிய புலனாய்வுப் பிரிவினரை அழுத்தங்களுக்கு உட்படுத்தும் வகையில் நடவடிக்கைககள் இடம்பெற்று வருவது வருத்தமளிக்கின்றது என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like