முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி! தீர்தம் எடுக்கும் நிகழ்வு திங்கள் ஆரம்பம்

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி! தீர்தம் எடுக்கும் நிகழ்வு திங்கள் ஆரம்பம்

வரலாற்று தொன்மை மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வின் முன் நிகழ்வாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியினை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு ஒழுங்குடன் ஆலய பொங்கல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் உப தலைவர் ச.கனகரத்தினம் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியினை காண்பதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு எதிர்வரும் 13ம் திகதி திங்கட் கிழமை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புதறிகுடா, தண்ணீர் ஊற்று சிலாவத்தை வழியாக சிலாவத்தை கடற்கரையினை சென்றடைந்து தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுக்கப்பட்டு அதே வழியாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு தீர்த்தம் எடுத்து வரப்படும்.

மேலும் அன்று மடை பரவப்பட்டு உப்புநீரில் விளக்கெரியும் காட்சி அற்புத காட்சியை தொடர்ந்து ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் விளக்கெரியும் காட்சியுடன் காலை, மாலை பூசைகள் சிறப்புற நடைபெறும்.

தற்போது மக்கள் கூட்டத்திற்கு பொருத்தமில்லா காரணத்தால் மக்கள் பக்குவமாக வழிபாடுகள் மேற்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பாரிய பொதிகளை கொண்டுவருவதை தவிர்த்து, வழிபாட்டிற்கு வேண்டிய அர்ச்சனை பொருட்களை ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தீர்த்தம் எடுத்ததில் இருந்து ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியுடன் பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

இறுதியாக 19ம் திகதி காட்டுவிநாகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெறும். ஆலயத்திற்கு வரும் மக்கள் அனைவரும் அடையாள அட்டைகளுடன் வரவேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

You might also like