மைத்திரியால் இலங்கை அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

மைத்திரியால் இலங்கை அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

இலங்கையில் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயமாக நாளையதினம் சீனாவுக்கு செல்லவுள்ள நிலையில் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் செயற்பட்ட காலத்தில் ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது, அவருக்கு பதிலாக இன்னொரு பாதுகாப்பு அமைச்சரை தற்காலிகமாக நியமித்து விட்டு போவது வழமை.

எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற போது ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்போது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் அவர் சென்றிருந்தார்.

இதன்காரணமாக தொடர் தாக்குதல்களின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்டி முடிவுகளை எடுப்பதற்கு, முப்படைகளின் தளபதிகளும் அதிகாரிகளும் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை.

இதனால், ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன.

இந்தநிலையில், இலங்கையில் தற்போதும் அச்சமான சூழ்நிலையே காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள எடுத்து முடிவு அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பாரா அல்லது சீனாவில் இருந்தபடியே பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் நேரடியான தொடர்பில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You might also like