ஐ.எஸ். பயங்கரவாதம் கற்பித்துள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான பாடம்

ஐ.எஸ். பயங்கரவாதம் கற்பித்துள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான பாடம்

ஐ.எஸ். தாக்குதலின் பின்னர் சிலருக்கு ஞானம் பிறந்தது போல இன்று விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தி அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத குழு போன்று எந்த தற்கொலை தாக்குதல்களையும் செய்யவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கைக்குள் ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்துவிட்ட பொறுப்பை இலங்கை அரசாங்கமும் ஏற்க வேண்டும்.

மற்றைய மதங்களை அழித்து தமது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்களை விடுதலைப்புலிகளுடன் ஒப்பிட்டு பேச முடியாது.

இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய மிலேச்சத்தனமான தாக்குதலாக இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலைக் காணலாம்.

இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 29பேர் காவு கொள்ளப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இஸ்லாமிய இராஜியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளின் குழுவாக இருப்பவர்களினால் இத்தாக்குதல் இலங்கையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தீவிரவாதிகளும் அல்ல. கிளர்ச்சியாளர்களும் அல்ல. இவர்களுக்கு பயங்கரவாதிகள் என்ற பதம் மாத்திரமே பொருந்தும்.

இந்த பயங்கரவாதிகள் மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.

எமது நாட்டில் இது முதலாவது தாக்குதலாக இருப்பினும் இத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதாகவே தகவல்கள் கிடைத்து அரசாங்கத்திற்கு அறிவித்ததாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் பிரதமர் ஜனாதிபதி உட்பட சகலரும் அறிந்திருந்தபோதும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் காரணமாக அப்பாவி உயிர்களை இழந்திருக்கின்றோம்.

இதற்கு முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி உட்பட அரசாங்கமே ஏற்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் கிறிஸ்தவ தேவாலயங்களைத் தான் இலக்கு வைத்துள்ளனர்.

பௌத்த விகாரைகளையோ பௌத்தர்களையோ இலக்கு வைக்கவில்லையே. பேசாமல் விடுவோம் என்று அலட்சியமாக இருந்தார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சிலருக்கு ஞானம் பிறந்தது போல இன்று விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தி அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத குழு போன்று எந்த தற்கொலை தாக்குதல்களையும் செய்யவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

உண்மையில் விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய பயங்கரவாத குழுவை ஒப்பிடுவதோ அவர்களின் கொள்கையுடன் இஸ்லாமிய பயங்கரவாத குழவை இணைத்து விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

1970 காலப்பகுதியில் இலங்கையில் ஜே.வி.பி மேற்கொண்ட கிளர்ச்சிக்கு கூட ஒரு கொள்கை இருந்தது. இலங்கை அரசாங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அவர்களின் போர் நடவடிக்கை தாக்குதல்கள் இருந்தன.

அவர்களும் பெரிய அளவில் பொதுமக்களை இலக்கு வைத்து எந்த தற்கொலை தாக்குதல்களையும் நடத்தவில்லை.

விடுதலைப் புலிகள், ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் எவருமே மேற்கெள்ளாத மிலேச்சத்தனமான மதவாத படுகொலை தாக்குதலை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஒருநாள் தாக்குதலை ஒரு மாத காலத்தினுள் அடக்கி விட்டதாக பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

நல்லவிடயம் இருந்தும் இன்னும் சில சூத்திரதாரிகள் அரசியல் முகமூடிக்குள் ஒழிந்திருப்பதாக சந்தேகம் பலரிடம் உள்ளது. அந்த சந்தேகம் தமிழர்களிடம் மட்டுமன்றி பௌத்த துறவிகளிடும் இருப்பதனால்தான் உண்ணாவிரத போராட்டங்களும் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார்.

You might also like