வன்னியில் சேவகரை அச்சுறுத்திய ஸ்ரீலங்கா படையினர்; அவசரகால சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ளது!

வன்னியில் கிராம சேவகரை அச்சுறுத்திய ஸ்ரீலங்கா படையினர்; அவசரகால சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய ஐஎஸ் பயங்கரவாதிகளை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவெனக்கூறி சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள அவசரக்காலச் சட்டம் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எந்தவித காரணமும் இன்றி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராம சேவகர் ஒருவரை ஸ்ரீலங்கா படையினர் அச்சுறுத்தியுள்ளமை இந்த உண்மையை அப்பட்டமாக நிரூபிப்பதாக அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்றையதினம் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் அதன் கீழ் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள பொலிசார், இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினர் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டுவரும் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் காரணமாக நாளாந்தம் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது நாட்டில் அமுலில் உள்ள அவசரக்காலச் சட்டம் தமிழ் மக்கள் மீதே மிக மோசமாக பிரயோகிக்கப்படுவதாக தமிழர் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்றில் இன்றையதினம் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராம சேவகர் ஒருவரிடம் ஸ்ரீலங்கா படையினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் 1984ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு தென்னிலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு தான் கொண்டு சென்ற போதிலும் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் சார்ல்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன், மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்டங்களுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, மாவட்டம் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like