யாழில் ரஜினிக்காக ஆர்ப்பாட்டம்: நடத்தப்பட்டதன் பின்னணி என்ன..?

நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு தடை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக யாழ். நல்லூரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஈழத்துக் கலைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏமாற்றி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மற்றும் வவுனியாவில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு பெற்றுத்தருவதற்கான கூட்டம் என தெரிவித்தே பலரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “யாழ். வேலணை பகுதியை சேர்ந்த எங்களை, யாழ்ப்பணத்தில் கூட்டம் என பஸ்ஸில் ஏற்றி வந்தார்கள்.

காலை 10 மணியளவில் எங்களை ஏற்றினார்கள். மதிய சாப்பாடு மட்டும் வழங்கியதுடன், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து விட்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் யாழ்ப்பாணம் அராலி பகுதியை ​சேர்ந்தவர்கள். வீட்டுத் திட்டங்கள் கிடைக்காதவர்கள், வீடு தேவையானவர்களுக்கு தர போறதாக கதைத்தார்கள்.

இதனையடுத்து, வீடு கையளிப்பது தொடர்பான கூட்டம் எனக்கூறி அழைத்து வந்து இங்கே விட்டுள்ளார்கள். இங்கு வந்த பின்னரே ரஜினி யாழ்ப்பாணம் வர வேண்டும் என்பது தொடர்பான ஆர்ப்பாட்டம் என்று” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் ரஜினியின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like