பாதுகாப்பு கடவை அமைத்து தருமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்

பாதுகாப்பு கடவை அமைத்து தருமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்

கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவை அமைத்து தருமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை ஏழு மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின்போது படையினர் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, குறித்த பாதையை பாதுகாப்பான கடவையாக மாற்றி தருமாறு கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு புகையிரதம் சுமார் ஒரு மணிநேரம் தாமதித்தே பயணத்தை தொடர வேண்டி நிலை ஏற்பட்டிருந்தது.

அத்துடன் புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் தரித்து நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் சந்தித்து சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக வழங்கப்பட்ட உறுதியின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

You might also like