உயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை!!

உயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை!!

விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில் இருந்து இரு சகோதரர்கள் திருட்டுத்தனமாக ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிட்டனர்.

அப்போது 22 வயதான பர்தீப் சைனி மற்றும் அவரது சகோதரர் 19 வயதான விஜய் ஆகிய இருவருமே, போயிங் 747 ரக ராட்சத விமானத்தில் திருட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள். 40,000 அடி உயரத்தில், -60C வெப்பநிலையில் சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட அரிதான அந்த குட்டி அறையில் இந்த இரு இளைஞர்களும் சாகச பயணம் மேற்கொண்டனர்.

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனின் ஹீத்ரோ வரையான இந்த 11 மணி நேர சாகச பயணத்தில் பர்தீப் வெற்றி கண்டாலும் அவரது சகோதரர் விஜய் மரணமடைந்தார். விமானம் தரையிறங்கி சில மணி நேரங்களில் ஓடு தளத்தில் காலூன்றிய பர்தீப் குழப்பத்தில் இருந்துள்ளார். அவரை மீட்ட அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கேயே தமது சகோதரர் விஜய் இறந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கொடூரமான நிலையில் விஜய் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்க சக்கரங்களுக்கான பெட்டி திறக்கும்போது, தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருந்து விஜயின் சடலம் விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் 5 நாட்கள் கடந்த பின்னரே ரிச்மண்ட், சர்ரே பகுதியில் இருந்து விஜய்யின் சடலத்தை மீட்டுள்ளனர். பர்தீப் கூட விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார்.

தற்போது வெம்ப்லி, வடக்கு லண்டன் பகுதியில் குடியிருக்கும் பர்தீப் சைனி நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னரே பிரித்தானியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பர்தீப் சைனி, அவர் திருட்டுத்தனமாக நுழைந்த அதே ஹீத்ரோ விமான நிலையத்திலேயே சாரதியாக பணியாற்றி வருகிறார்.

You might also like