சவூதியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் 5 மாதங்களுக்கு பின் உறவினர்களிடம் கையளிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த மலையகப் பெண்ணின் உடல் ஐந்து மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது – 41) எனும் மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே 5 மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது குடும்ப வறுமையின் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற இவர் சவூதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

01.11.2016 அன்று இவர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து உறவினர்கள் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றோடு தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரியுள்ளனர்.

நீண்ட முயற்சியின் காரணமாக 5 மாதங்கள் கடந்த பின் குறித்த பெண்ணின் சடலம் நேற்றிரவு கொழும்பில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாகவே இப்பெண் உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழை சவூதி அரேபியா நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை உறவினர்களால் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சடலத்தை மரண பரிசோதனை செய்யப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கொழும்பில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூரிய ஆயதங்களால் தாக்கப்பட்டமையினாலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக இலங்கையின் வைத்திய அறிக்கை தெரிவித்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

மலையக தோட்டப்பகுதியிலிருந்து குடும்ப பிரச்சினை மற்றும் வறுமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்களின் நிலை இவ்வாறாகவே அமைகின்றது.

எனவே மலையக பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்கள் இவ்வாறான சம்பவங்களை அறிந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வதை தடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், எமது குடும்பத்தின் உறவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது எனவும் குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like