யாழ். பல்கலைக்கழக குழப்பநிலை விவகாரம் : 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க முடிவு

கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நிகழ்வை நடாத்துவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதனையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன்போது இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களிற்கு வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் இன்று செவ்வாய்க்கிழமை (28) முடிவு செய்துள்ளது.

குறித்த தினத்தன்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்ப நிலமையை அடுத்துப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையின் கண்ணாடிகள் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டன.

பதற்றத்தைத் தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்துப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் சட்டத் துறை, இராமநாதன் நுண்கலைத்துறை தவிர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது.

எனினும் இந்த முடிவிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014,2015 கல்வியாண்டுக்கான முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்குரிய முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், கலைப்பீடத்தில் சட்டத் துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்கள் தவிர்ந்த ஏனைய

துறைகளைச் சார்ந்த மூன்றாம், நான்காம் வருட மாணவர்கள் விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகளை ஆராய்ந்த பல்கலைக் கழக நிர்வாகம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 13 மாணவர்களிற்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை(29) ஆரம்பமாகும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

You might also like