கிளிநொச்சியில் ‘கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாமைக்கு அரசியலே காரணம்’

கிளிநொச்சி வலயத்துக்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் வலுப்பெற்று வருவதாக, கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்று இருமாதங்கள் கடந்த நிலையிலும் கிளிநொச்சி வலயத்துக்கான நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியலே காணப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

“போரினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரும் பின்னடைவினை எதிர்கொண்டுள்ள நிலையில், கிளிநொச்சி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெறவுள்ளார் என்ற விடயம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு நன்கு தெரியும்.

ஆனால், உடனடியாக ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமித்து இருக்க வேண்டும். அதனை வடமாகாண கல்வி அமைச்சு செய்யவில்லை. வடமாகாண கல்வி அமைச்சு 32,000 மாணவர்களைக் கொண்ட கிளிநொச்சி வலயத்துக்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளரை நியமிக்காததன் பின்னணியில் அரசியலே உள்ளது.

கிளிநொச்சி வலயத்தில் கல்வி முகாமைத்துவம், கல்வி அபிவிருத்தி என்பவற்றிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் இல்லை. கிளிநொச்சி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவரே தற்போது வடமாகாண கல்வி அமைச்சராக உள்ளார்.

கிளிநொச்சி வலயத்தின் நெருக்கடி நிலைமையினை நன்கு அறிந்த இருவர் வடமாகாண சபையில் உள்ள நிலையில் அரசியல் குறுக்கீடுகளை களைந்து, விரைவில் கிளிநொச்சி வலயத்துக்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளிநொச்சி வலயத்திலே நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் இல்லாததன் காரணமாக அதிபர்கள். ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்” என, அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like