பொலிஸ் நிலையத்தில் பரீட்சை எழுதிய மாணவர்கள்!

தம்புள்ளை நகர் அருகே கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் வைத்து இரண்டு மாணவர்கள் தவணைப் பரீட்சை எழுதி உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைதரும் புகையிலைப் பாவனை திருட்டுச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்தமை காரணமாக கல்கிரியாகம பிரதேச மாணவர்கள் இரண்டு பேர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்களின் பாடசாலையில் தவணை பரீட்சை ஆரம்பமாகியிருந்தது. எனினும் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாணவர்களுக்கும் தவணைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்புக் காணப்படவில்லை.

இதனைக்கருத்திற்கொண்ட கல்கிரியாகம பொலிசார், பொலிஸ் நிலையத்தின் ஒருபுறமாக தற்காலிக பரீட்சை மண்டபம் ஒன்றை ஏற்படுத்தி மாணவர்களின் பாடசாலை பிரதி அதிபரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர் பொலிசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

You might also like