யாழில் முக்கொலை நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட இரத்தம் : நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியம்

யாழ். அச்சுவேலியில் முக்கொலை இடம்பெற்ற இடத்தில் இருந்து இரத்தப் படிவுகள், தலைமுடி, நைலோன் கயிறு என்பவற்றை மீட்டுள்ளதாக யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முக்கொலை வழக்கு விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே வழக்கின் யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பிரிவு உப பரிசோதகர் ஜெயவம்ச மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

2014.05.04ஆம் திகதி நடைபெற்ற முக்கொலை தொடர்பாக தடயப்பொருட்களை சேகரிக்க சென்றிருந்த போது, உடலில் இருந்து வந்த இரத்த படிவுகளையும், இரண்டு இடங்களில் காணப்பட்ட தலைமுடிகளையும் வீட்டின் முற்றத்தில் இருந்த கயிற்றையும் சேகரித்து தடயப்பொருட்களாக இணைத்திருந்தேன்.

இதன்போது கைப்பற்றப்பட்ட கயிறு யாருடையது என உங்களுக்கு தெரியுமா? என எதிர் தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்த போது தெரியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொலிஸ் சார்ஜன் சேனவிரட்ண ராஜபக்ஸ சாட்சியமளிக்கையில்,

குறித்த குற்றச் செயல் தொடர்பாக கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியை பரிசோதனை செய்தபோது அதில் சிவப்பு நிற கறை இருந்தது. அது இரத்தம் போன்றதாக காணப்பட்டிருந்தது. அத்துடன் பின் ஆசனத்தில் இரத்த கறைகள் இரண்டு காணப்பட்டிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் மூன்றாம் கட்ட சாட்சிப் பதிவிற்காக இன்று (29) காலை 9 மணிவரை வழக்கை ஒத்திவைக்கவும் அதுவரை குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

You might also like